கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து - TPV11
திருப்பாவை பதினொன்றாம் பாடல்
பெண்ணே, அசையாமல் பதில் பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன?
உசேனி ராகம் , மிச்ரசாபு தாளம்
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து,
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.
பொருளுரை:
கன்றுகளை ஈன்று, மிகுதியாக பால் சுரக்கும் பசுக்கூட்டங்களை கறப்பவர்களும், பகைவர்களின் பலம் அழிய, அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று போர் புரிபவர்களும் ஆன, ஒரு குறையுமில்லாத, இடையவர்களின் குலத்தில் தோன்றிய தங்கக்கொடியை போன்ற அழகிய வடிவுடைய பெண்ணே!
புற்றிலிருந்து வெளிவந்து படமெடுக்கும் நாகத்தின் கழுத்துக்கு நிகரான மெல்லிடையும், கானகத்து மயிலை ஒத்த சாயலையும் கொண்டவளே, விழித்தெழுந்து வருவாயாக! ஊரிலுள்ள அனைத்து தோழியரையும், உறவினர்களையும் அழைத்து வந்து, உன் வீட்டின் முற்றத்தில் குழுமி, கார்மேக நிறக் கண்ணனின் திருநாமங்களை போற்றிப் பாடியபடி உள்ளோம்! செல்வம் நிறைந்த பெண்ணை, நீ சிறிதும் அசையாமலும் பேசாமலும் இவ்வாறு உறங்குவதன் அர்த்தத்தை நாங்கள் அறியோம்!
பாசுரம் தரும் செய்திகள்:
"கற்றுக்கறவை கணங்கள் பல கறந்து" - இச்சொல்லாடலுக்கு 'அக்கோவலர் இல்லத்தில் ஏராளமான (எண்ணிக்கை தெரியாத அளவுக்கு!) பசுக்கள் இருந்தன. அவற்றில் கன்றுகள் போல் இருந்தனவும் ஈன்று பாலை சுரக்கத் தொடங்கி விட்டனவாம்' என்ற அர்த்தத்தை வைணவப் பெருந்தகைகள் கூறிச் சென்றுள்ளனர். ஆக அவ்வீட்டில், கன்று, கறவை என்ற இரண்டு வகையுமே பாலைச் சுரந்தன, சிறுவயதிலேயே ஞானத்தைப் பொழிகின்ற ஆச்சார்யர்களைப் போல!
அக்கோவலர் தம்/பிறர் தேவைக்காகவும், பசுக்களின் மடியில் பால் கட்டிக் கொண்டு அவை துன்புறக்கூடாது என்ற எண்ணத்திலும், அத்தனை பசுக்களிடமும் நிதம் பால் கறக்கும் கடுமையான தொழிலை மனமகிழ்வோடு செய்து வந்தார். அதோடு, (செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்) பகைவரை அவரது இருப்பிடத்திற்கே சென்று, வென்று அடக்கும் திறம் படைத்தவர் அவர்.
அட, பால் கறக்கும் ஆயருக்கு ஏது பகைவர் என்ற கேள்வி எழுவது நியாயமே! கண்ணனின் பகைவர் தான் ஆயர்பாடியில் வாழ்ந்த அனைவருக்கும் பகைவர்! அதனால் தான் நாச்சியார் பேர் எதுவும் கூறாமல், 'செற்றார்' என்று பொதுவாக பகைவரைக் குறிக்கிறார்.
அக்கோவலர் பகைவருடன் போரிட்டு அவர்தம் பலத்தையும், திறனையும் குன்றச் செய்து அவர்களை வெற்றி கொண்டாலும், அப்பகைவரை அழிப்பதில்லை. அதனாலேயே அவரை "குற்றமொன்றில்லாத கோவலர்" என்கிறாள் ஆண்டாள்!
அதோடு, அக்கோவலர், பக்தி, ஞான யோகங்களை கடைபிடிக்காத போதும், கர்ம யோகத்தில் சிறந்து விளங்குவதால், அதுவே பரமனுக்குப் போதுமானது என்பதை "குற்றமொன்றில்லாத கோவலர்" என்பதின் வாயிலாக ஆண்டாள் வலியுறுத்துவதாகக் கொள்ளலாம்.
அத்தகைய "குற்றமொன்றில்லாத கோவலர்" வீட்டில் பிறந்த பெண் "பொற்கொடி"யாகத் தானே இருக்க முடியும். கர்மயோகியின் மகளாகப் பிறந்த பெண் இப்படித் தூங்கலாமா என்று ஆண்டாள் விசனப்படுவதாகக் கொள்வதிலும் ஒரு நயம் இருக்கிறதில்லையா :)
நேர வித்தியாசத்தைக் கூட, ஒரு பாசுரத்திலிருந்து அடுத்த பாசுரத்துக்குச் செல்கையில், ஆண்டாள் அழகாகக் குறிக்கிறாள். "எருமைச் சிறுவீடு மேய்வான பரந்தன காண்" என்று 8வது பாசுரத்தில் பாடிய கோதை, இப்பாசுரத்தில் அவற்றைக் கறக்கும் நேரம் நெருங்கி விட்டதை சொல்லி, உறங்குபவளை எழுப்புகிறாள்!
"புற்றரவல்குல் புனமயிலே" என்று அப்பெண்ணை வர்ணிக்க ஒரே நேரத்தில், பாம்பையும் அதன் பரமவைரி மயிலையும் துணைக்கழைத்ததில்(oxymoron போலத் தோன்றினாலும்!) ஆண்டாளின் கவிநயம் தெரிகிறதல்லவா! உறங்கும் அப்பெண்ணின் கூந்தல் பரந்து கிடப்பது, அழகான மயில் தோகை விரித்தாடுவதை போலுள்ளதாம். அதோடு, தனது இயல்பான இடமான வனத்தில் சுதந்திரமாக வசிக்கும் "புன"மயிலே மகிழ்ச்சியோடு இருக்கும்!
ஒரு வகையில், பொற்கொடி, புனமயில் போன்ற உருவகங்கள் அப்பெண்ணின் மெல்லிய இயல்பை உணர்த்துவதாம். அப்பொற்கொடி நாடும் கொழுகொம்பு கண்ணனன்றி வேறு யாராக இருக்க முடியும்! மெல்லிய இயல்புடையவளாயினும், "புற்றரவல்குல்" (படமெடுக்கும் நாகத்தின் கழுத்தையொத்த இடை) என்ற வர்ணனை அவ்வடியவளின் (கண்ணனை அடைய வேண்டும் என்ற) வைராக்கியத்தைக் குறிப்பிலுணர்த்துவதாக வைணவப் பெரியோர் அருளியிருக்கிறார்கள். அதாவது, "சிறுத்த இடை" என்பது சிற்றின்ப ஆசை சிறுத்து வைராக்கியம் மிகுந்த (பற்றற்ற) நிலையைக் குறிப்பதாம்!
இத்தனை விரிவாக (பொற்கொடி, புற்றரவல்குல், புனமயிலே) என்று அப்பாகவதையின் புறத்தோற்ற அழகை ஆண்டாள் பாடுவதிலிருந்தே, அப்பெண் அக அழகும் (பரமபக்தி, ஞானம், அடக்கம்..) மிக்கவள் என்பதைக் குறிப்பில் கொள்ள வேண்டும்.
மயிலைப் பாடிய ஆண்டாளுக்கு, மழை மேகம் ஞாபகத்துக்கு வந்து விட்டது போலும்! மழை மேகத்தைக் கண்டு தானே மயிலானது தோகை விரித்தாடும் இல்லையா! மழை மேகம் கருமை நிறம், அதுவே கண்ணனின் நிறம். அதனால்,(முற்றம் புகுந்து) முகில்வண்ணன் பேர் பாடப்பட்டது :-)
*****************************************
பாசுரச் சிறப்பு:
இப்பாசுரத்தில், அசாதாரணமான அழகுடையவளும், குலப்பெருமை வாய்த்தவளும் ஆன ஒரு கோபியர் குலப்பெண்ணை ஆண்டாள் துயிலெழுப்புகிறாள். "கண்ணனே உபாயமும் உபேயமும்" என்று உணர்ந்த உத்தம பக்தையை கோதை துயிலெழுப்புகிறாள்.
ஆண்டாள் "பொற்கொடியே, புனமயிலே, செல்வப் பெண்டாட்டி" என்றெல்லாம் போற்றுவதிலிருந்தே இந்த பாகவதை ஆச்சார்யனிடம் கற்றுணர்ந்த உத்தம அதிகாரி என்பது புலப்படுகிறது. பொற்கொடியே எனும்போது குலத்தாலும், புனமயிலே எனும்போது வடிவாலும், செல்வப்பெண்டாட்டி எனும்போது குணத்தாலும் என்று எல்லாவற்றிலும் சிறந்த அடியவள் இவள் என்பதும் தெளிவு.
பொற்கொடி - பக்தி
அல்குல் - பரபக்தி
புனமயில் - பரம பக்தி
ஆக, பொற்கொடி, புற்றரவல்குல், புனமயில் ஆகியவை அவ்வடியவளின் (ஜீவாத்மா) கண்ணன் (பரமாத்மா) மீதான உன்னதமான பக்திக்கான உருவகங்களே!
"புற்றரவல்குல்" என்பது குறித்து பிரதிவதி பயங்கரம் அன்னங்கார்ச்சார்யார், 'நாகமானது தனது இருப்பிடமான புற்றுக்குள் இருக்கையில், தனது கம்பீரத்தை சுருக்கிக் கொண்டு அடக்கமாக இருப்பது போல, பக்தி மிகுந்திருக்கும்போது, ஞானமும் வைராக்கியமும் எளிதில் கைகூடுவதாக' அற்புதமாக அருளியிருக்கிறார்!
அதாவது, பக்தி, ஞானம், வைராக்கியம் என்ற மூன்றில் பக்திக்கே உயர்வான இடம் வைணவத்தில் வழங்கப்பட்டுள்ளது. கர்மம், ஞானம் இன்னபிற யோகங்கள் பெறப்படுபவை, ஆனால் பக்தி யோகம், அதுவாக வாய்க்க வேண்டும்! மேலும், மயிலானது மகிழ்ச்சியாக இருக்கையில் தன் தோகையை விரித்தாடுவது போல, நற்குணங்களுடைய சீடன் அமையும்போது ஆச்சார்யனின் ஞான விகாசம் வெளிப்பட்டு நன்மை பயக்கிறது என்று சுவாமிகள் அருளியிருக்கிறார்!
'முற்றம்' என்ற பதம் பரமனின் அடியார் கூடும் இடம் என்பதைக் குறிக்கிறது.
குலசேகரப் பெருமாள் அருளிய "
அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்*
இன்பமிகு பெருங்குழுவு கண்டு* யானும்-
இசைந்துடனே என்றுகொலோ இருக்கும் நாளே"
என்பதை நினைவு கூர வேண்டும்.
அப்பெண்ணின் (ஆயர் குல) உறவினர், கர்ம யோகத்தை (எண்ணற்ற பசுக்களை பராமரிப்பது, பால் கறப்பது, பகைவர்களிடமிருந்து தம் மக்களை பாதுகாப்பது) சிரத்தையாக கடைபிடிப்பவர்கள். அதாவது, கடமையைச் செய்வது, இறை சேவைக்கு ஒப்பானது என்று கோதை நாச்சியார் வலியுறுத்துவதாகக் கொள்ளலாம்!
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து - புராண, இதிகாச, உபநிடதங்களை கற்று, அதன் ஞானத்தை உள்ளடக்கிய (அதனால் சீடர்கள் புடை சூழ இருக்கும்!) ஆச்சார்யத் தன்மையை உட்பொருளாகக் கொண்டுள்ளது.
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் - வேதங்களை சரியாக கற்காதவரையும், இறைநம்பிக்கையற்றவரையும், சாத்திரங்கள் குறித்த விவாதங்களில் வெற்றி கொண்டு, அதன் மூலம் பக்தி மார்கத்தை செம்மைபடுத்தி, இறையன்பு ஒன்றையே முன் நிறுத்திய வைணவப் பாரம்பரியத்தை போற்றும் தன்மை இதன் உள்ளுரையாம்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே - வேதங்களில் பாண்டித்யம் பெற்றவரை ஆச்சார்யனாக அடையும் பேறு பெற்ற சீடனை குறிப்பில் உணர்த்துகிறது ( கோவலர் - கோ என்றால் வாக்கு அல்லது வேதம்) கோவலர் என்பது வேதத்தை பாதுகாக்கும் ஆச்சார்யர்கள். அத்தகைய ஆச்சார்யர்களாகிய கொழுகொம்பின் மேல் படர்ந்து ஞானம் பெறும் கொடியாக (உத்தம அதிகாரியான) சீடன் விளங்குகிறான்.
புற்றரவு - ஆச்சார்ய பக்தியும், மிகுந்த அடக்கமும் உடைய சீடன் (புற்றில் இருக்கும் நாகம் தன்னைச் சுருட்டிக் கொண்டிருக்கும் அல்லவா?)
புனமயிலே - பெருமாளின் ஆயிரம் நாமங்களை ஓதும் சீடன்
போதராய் - ஆனந்த அனுபவத்தில் திளைப்பாயாக!
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து - வைகுண்டத்திலிருந்து வந்திருக்கும் பெருமாளின் தூதர்கள் (பெரும் வைணவ அடியார்கள்) அனைவரும்
நின் முற்றம் புகுந்து - உனது சூட்சம சரீரத்தில் நிழைந்து (ஆன்மாவை அடைந்து)
முகில்வண்ணன் பேர் பாட - பரமனது திருநாமங்களை ஓதியபடி உன்னை பரமபதத்திற்கு கூட்டிச் செல்லக் காத்திருக்கின்றனர்.
சிற்றாதே - அறிந்தோ, அறியாமலோ செய்த வினைகள் குறித்த கவலையை உதறியதால்
பேசாதே - அகங்காரத்தையும் மமகாரத்தையும் தொலைத்து, பகவானின் திருநாமங்கள் தவிர வேறெதையும் பேசாமல்
செல்வப் பெண்டாட்டி நீ - கண்ணனுக்கு உகந்த அடியவள் நீ, கிருஷ்ணானுபவம் என்ற செல்வம் மிக்க அடியவள் நீ!
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய் - எங்களது அஞ்ஞானத்தையும், குறைகளையும் விலக்கி, எங்களது உய்வுக்கு உதவாமல் இருப்பதன் அர்த்தம் என்னவோ?
*************************************
இப்பாசுரம் பூதத்தாழ்வாருக்கு கோதை நாச்சியாரின் திருப்பள்ளியெழுச்சி என்று ஐதீகம். ஏன் என்பதற்கு அழகான விளக்கமும் உண்டு !!!
"குற்றமொன்றில்லாத கோவலர்" என்பது பூதத்தாருக்கு மிகவும் பொருந்தும், ஏனெனில் அவர் கருவிலிருந்து உருவான குறை கூட இல்லாமல், மலரிலிருந்து தோன்றியவர். ஏன், முதல் 3 ஆழ்வார்களுமே அயோனிஜர்கள் தான்!
"பொற்கொடியே" என்று பூதத்தாழ்வார் தனது திருவந்தாதியில் தன்னை அழைத்துக் கொண்டுள்ளார்
"தேடியோடும் கொழுந்ததே போன்றதே மால் தேடியோடும் மனம்"
எம்பெருமான் என்ற கொம்பு மீது படரும் கொடியாக தன்னை வர்ணிக்கிறார் !
கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து - இவ்வரியையும் பூதத்தாருடன் (முதல் 3 ஆழ்வார்களுடனேயே கூட) தொடர்புபடுத்த முடியும்.
பொய்கையாரின் முதல் திருவந்தாதி 'கறவை கணம்' என்றும், பூதத்தாழ்வாரின் 2வது திருவந்தாதி "கறவை கணங்கள்" என்றும், பேயாழ்வாரின் 3ஆம் திருவந்தாதி "கறவை கணங்கள் பல" என்றும் குறிப்பிடப்படுகின்றன!
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் - நாம் பல இடங்களுக்குச் சென்று பகவத் விரோதிகளை விவாதங்களில் வென்று நல்வழிக்கு கொணர வேண்டும் என்று பூதத்தாரே அவரது பாசுரம் ஒன்றில் இயம்பியுள்ளார்
பண்டு இப்பெரும்பதியை ஆக்கி* பழிபாவம்-
கொண்டுஇங்கு* வாழ்வாரைக் கூறாதே,* - எண்திசையும்-
பேர்த்தகரம் நான்குடையான்* பேரோதிப் பேதைகாள்*
தீர்த்தகரர் ஆமின் திரிந்து.
புற்றரவல்குல் - மேலே சொன்னபடி அல்குல் = பரபக்தி.
பரபக்தி என்றால் பரமன் மேல் வைத்த பேரன்பு. இவ்வாழ்வார் தனது திருவந்தாதியை "அன்பில்" தொடங்கி, அன்பிலேயே முடித்துள்ளார் என்பது குறிப்பிட வேண்டியது.
முதல் பாசுரம்:
அன்பே தகளியா* ஆர்வமே நெய்யாக,*
இன்புருகு சிந்தை இடுதிரியா,* - நன்புருகி
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன்* நாரணற்கு*
ஞானத் தமிழ்புரிந்த நான்.
கடைசிப் பாசுரம்:
மாலே. நெடியானே.* கண்ணனே,* விண்ணவர்க்கு-
மேலா.* வியன்துழாய்க் கண்ணியனே,* - மேலால்-
விளவின்காய்* கன்றினால் வீழ்த்தவனே,* என்தன்-
அளவன்றால்* யானுடைய அன்பு.
ஞானம்,பக்தி,விரக்தி என்ற மூன்றில் பக்தி நடுவண் உள்ளது. அது போல, முதல் மூன்று ஆழ்வார்களில் பூதத்தார் நடு ஆழ்வார் !
சுற்றத்து தோழிமார் - பொய்கையாரும் பேயாழ்வாரும் பூதத்தாரின் உறவினர்! மற்ற ஆழ்வார்கள் தோழர்கள்!
முகில்வண்ணன் பேர் பாட - பூதத்தாழ்வார் தான் முதன் முதலில் "முகில் வண்ணன்" என்று பெருமாளை வர்ணித்தவர் என்பது கவனிக்க வேண்டியது.
உற்று வணங்கித்* தொழுமின் உலகேழும்*
முற்றும் விழுங்கும் முகில்வண்ணம்,* - பற்றிப்-
பொருந்தாதான் மார்பிடந்து* பூம் பாடகத்துள்-
இருந்தானை,* ஏத்தும் என் நெஞ்சு.
ஆச்சார்ய மயிலானது (புனமயிலே!) கார்மேக வண்ண மேனி கொண்ட எம்பெருமானை போற்றிப் பாடுவது இயல்பானது தானே :)
****************************************************
சில குறிப்புகள்:
கண்ணனின் நெருக்கத்தால், கோகுலத்தில் வாழ்ந்த பசுக்கள் பலகாலம் இளமையாகவே இருந்ததால், அவை மிகுந்த எண்ணிக்கையில் இருந்தன (கற்றுக் கறவைக் கணங்கள் பல!). அவற்றை அடையாளம் காண்பதும் மிகுந்த சிரமமாகவே இருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, தேவர்களில் பலர், பசுக்களாக உருவெடுத்து, கண்ணனுக்கு அருகாமையிலேயே தாங்கள் இருக்கும்படி ஏற்பாடு செய்து கொண்டனராம் :)
அப்பசுக்களை தான் மாயக்கண்ணன் எத்தனை தடவை ஆபத்திலிருந்து காத்துள்ளான்!
அகாசுரன் பசுக்களை விழுங்க முயன்றபோது,
பிரம்மன் ஒரு முறை பசுக்களையும், ஆயர்களையும் சிறை பிடித்து ஒளித்து வைத்தபோது,
இந்திரன் ஒரு தடவை பெருமழையையும், காற்றையும் உருவாக்கி இன்னல் விளைவித்தபோது
என்று அவற்றை ரட்சித்து எத்தனை லீலைகள்!
செற்றார் திறல் அழிய - ஆயர்கள் பகைவர்களைக் கூட கொல்ல மாட்டார்கள். அவர்களின் பலமும் கர்வமும் அடங்குமாறு செய்வார்கள்
புற்றரவல் குல் புனமயிலே - ஆண்டாளுக்கு, பாம்பைப் பற்றிப் பேசியவுடன், அதன் பரம வைரியான தோகை மயிலின் ஞாபகம் வந்து விட்டது போலும் :) பொதுவாகவே, ஆச்சாரியனை மயிலுடன் ஒப்பிடும் வழக்கமிருந்தது.
புழுபூச்சிகள் மயிலின் அருகில் செல்லாதது போல, தீய எண்ணங்கள் ஆச்சார்யனை அண்டுவதில்லை.
மயில் தனது இறகை அவ்வளவு சீக்கிரம் இழக்காது. அது போல, ஆச்சார்யனும், தனது ஞானச்சுற்றத்திலிருந்து வெளி வந்தாலும், தகுதியறிந்தே ஒருவனை சீடனாக ஏற்பார்.
மயிலுக்கு மேகம் பிடிக்கும். ஆச்சார்யனுக்கு மேக வண்ணனைப் பிடிக்கும் :)
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட -- வைணவர்க்கு பிடித்த இடம் முற்றம், அதாவது திவ்ய தேசங்கள், அங்கு சென்று பெருமாளை வணங்கி வழிபட்டு மங்களாசாசனம் செய்தல்!
என்றென்றும் அன்புடன்
பாலா
6 மறுமொழிகள்:
test !
பாலா அருமையான விளக்கங்கள் பாசுர சிறப்புகளும், பூதத்தாழ்வார் பாசுங்களும், தேவர்களை கண்ணன் பசுகளாக காத்ததும், மயிலின் சிறப்புகளும் இப்படி நிறைய விசயங்கள் கற்ற தருவதற்கு நன்றிகள்.
ஆண்டாள் அரங்கன் திருவடிகள் சரணம்.
அருமையான விளக்கங்கள் பாலா. பக்தி, பரபக்தி, பரமபக்தி இவற்றிற்கான விளக்கங்கள் எத்தனை முறை படித்தாலும் மனத்தில் நிற்பதில்லை. பாவை விளக்கங்களும் அப்படியே தான். அதனாலேயே ஒவ்வொரு முறை படிக்கும் போதும் சுவையாக இருக்கிறது. :-)
மின்னல், ஜூனியர்,
மிக்க நன்றி.
I have added more information and pictures to this thiruppaavai pasuram posting and re-published.
மிக அருமை நண்பர் பாலா அவர்களே .இத்துனை விளக்கங்கள் நிறைந்த இந்த பாவை நமக்கு துணை என்றே நினைக்க தோன்றுகிறது
சற்று தாமதமாக படிக்க நேரிட்டு விட்டது
Post a Comment